×

117 பயனாளிகளுக்கு ₹19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

 

ஆட்டையாம்பட்டி, ஏப்.21: சேலம் மாவட்டம் வேம்படிதாளம் ராஜாபாளையத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு முகாமில் ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டிப்பட்டி உள்பட 20 குக்கிராமங்களுக்கும் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதன் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது: மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, மின் விளக்குகள், சாலை வசதிகள், பேருந்து நிலையம், குடிநீர் வசதி, வீடு மராமத்து பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மக்கள் தொடர்பு முகாமில் மனு அளித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள், வருவாய்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை கொண்டு அம்மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக இந்த நிகழ்ச்சியிலேயே 5 மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவி தொகையாக ₹2 ஆயிரம் வழங்கப்படுவதற்குரிய ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 117 பயனாளிகளுக்கு ₹19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முகாமில் அட்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர், ராஜபாளையம் ஊராட்சி தலைவர் ரமேஷ், சமூக பாதுகாப்பு தனி துணை கலெக்டர் மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 117 பயனாளிகளுக்கு ₹19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Attaiyambatti ,Vembadithalam Rajapalayam, Salem district ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் பெயிண்டர் பலி